பட்ஜெட்டில், விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெறும் குமாரசாமி பேச்சு


பட்ஜெட்டில், விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெறும் குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2018 5:18 AM IST (Updated: 16 Jun 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு இடம் பெறும், கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக கணக்கு தணிக்கை நிறுவனத்தின் 15-வது மாநில மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு, எந்த ஆபத்தும் இல்லை. இந்த கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வரை எனது அரசுக்கு பிரச்சினை இல்லை. அதனால் ஊடகங்கள் அரசின் நிலைத்தன்மை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

எங்கள் அரசு, கிராமப்புறத்தினர் மற்றும் விவசாயிகளுக்காக மட்டுமே பணியாற்றவில்லை. நகரங்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபடும். நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைத்து வந்தேன். சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவுச் சாலை அமைக்கப்பட்டதும் எனது ஆட்சியில் தான்.

எனது தொலைநோக்கு திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சில முக்கியமான மக்கள் நலத்திட்டங்களை கூறி இருக்கிறேன். அந்த திட்டங்களை செயல்படுத்த நான் நேர்மையான முறையில் முயற்சி செய்வேன். விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன். பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம் பெறும்.

நிதி நிலை மற்றும் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவ நான் தயாராக உள்ளேன். எக்காரணம் கொண்டும் இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

பெங்களூருவில் போதுமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுப்பதில் நாம் தவறிவிட்டோம். கால்வாய்கள் மீது 147 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெங்களூருவின் பங்கு அபாரமானது. அதனால் பெங்களூருவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.

நாட்டின் வளர்ச்சியில் கணக்கு தணிக்கையாளர்களின் பங்கு மகத்தானது. சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு கணக்கு தணிக்கையாளர்களின் பணி மிக முக்கியமானதாக மாறிவிட்டது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

பெங்களூருவில் உள்ள மாநில கணக்கு தணிக்கை நிறுவனம் அமைந்துள்ள இடம் அரசு வழங்கிய இடமாகும். அந்த இடத்தின் குத்தகை காலம் முடிவடைவதால், அந்த குத்தகை காலத்தை நீட்டிக்குமாறு குமாரசாமியிடம் கணக்கு தணிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த இடத்தை குத்தகைக்கு வழங்குவதை விட சொந்தமாக உங்கள் அமைப்புக்கே வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமாரசாமி உறுதியளித்தார்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “அன்புக்குரிய விவசாயிகளே விவசாய கடன் தள்ளுபடி பற்றி குழப்பம் அடைய வேண்டாம். விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் நான் உறுதியாக உள்ளேன். அறிவியல் ரீதியாக அதிக விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் பணியாற்றி வருகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்-மந்திரி பதவி ஏற்று 24 மணி நேரத்தில் மாநிலத்தில் ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி தேர்தலுக்கு முன்பு அறிவித்தார். தேர்தல் அறிக்கையிலும் இதை தெரிவித்து உள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரசின் ஆதரவில் முதல்-மந்திரியாகி இருப்பதால், விவசாய கடனை தள்ளுபடி செய்வது கடினம் என்று அவர் கூறினார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் நடத்தியது. இதைடுத்து குமாரசாமி தனது கருத்தை மாற்றிக்கொண்டு, விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story