நடிகர் அர்மான் கோலி மீதான வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் அர்மான் கோலி மீதான வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2018 5:27 AM IST (Updated: 16 Jun 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

காதலியை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் அர்மான் கோலி மீதான வழக்கை ரத்து செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பிரபல இந்தி திரைப்பட நடிகர் அர்மான் கோலி. இவர் மாடல் அழகியான நீரு ரந்தவா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின்போது அர்மான் கோலி நீரு ரந்தவாவின் தலையை பிடித்து சுவரில் மோதினார்.

இதில் படுகாயமடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அர்மான் கோலி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அர்மான் கோலி மீதான புகாரை நீரு ரந்தவா வாபஸ் பெற சம்மதம் தெரிவித்தார். இதனால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அர்மான் கோலி மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அர்மான் கோலி ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதை சுட்டிக்காட்டி, அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என உறுதியளிக்கவும் வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து அர்மான் கோலி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்தும் மும்பை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அர்மான் கோலி மீதான வழக்கை ரத்து செய்தது.

மேலும் அர்மான் கோலி விடுதலையான பிறகு 6 மாதத்துக்குள் தேசிய பார்வையற்றோர் வாரியம் மற்றும் டாடா நினைவக ஆஸ்பத்திரியின் குழந்தைகள் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளார். 

Next Story