மும்பையில் 6 ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகள் திடீர் மூடல்


மும்பையில் 6 ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகள் திடீர் மூடல்
x
தினத்தந்தி 16 Jun 2018 5:38 AM IST (Updated: 16 Jun 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 6 ரெயில் நிலையங்களில் ஒரு ரூபாய்‘கிளினிக்’குகளை மத்திய ரெயில்வே திடீரென மூடியது.

மும்பை,

மும்பைவாசிகளின் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி 75 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தண்டவாளத்தை கடக்கும் போதும், ரெயிலின் மேற்கூரையில் பயணம் செய்து மின்சாரம் தாக்கியும் பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

மேற்படி ரெயில் விபத்துகளில் படுகாயம் அடைபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பான பொதுநலன் மனு ஒன்றின் மீது விசாரணை நடத்திய மும்பை ஐகோர்ட்டு, ரெயில் விபத்துகளில் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு அவசர சிகிச்சை அறைகளை திறக்க மத்திய, மேற்கு ரெயில்வேக்கு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து மத்திய ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள பிரதான ரெயில் நிலையங்களில் அவசர சிகிச்சை அறைகளை ‘மேஜிக் தில்' என்ற ஹெல்த் நிறுவனத்துடன் இணைந்து அமைத்தது.

இங்கு ரெயில் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி சாதாரண பயணிகளும் ரூ.1 கட்டணமாக கொடுத்து உடல் பரிசோதனை செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக இந்த அவசர மருத்துவ அறைகள் 1 ரூபாய் ‘கிளினிக்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ‘மேஜிக் தில்’ நிறுவனம் ரெயில்வேயின் விதிமுறைகளை பின்பற்றி ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகளை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய ரெயில்வே அதிரடியாக குர்லா, காட்கோபர், வடலா, கோவண்டி, வாஷி, முல்லுண்டு ஆகிய 6 ரெயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகளை அதிரடியாக மூடிஉள்ளது.

இதுபற்றி மத்திய ரெயில்வேயின் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி சுனில் உடாசி கூறுகையில், ‘மேஜித் தில்’ நிறுவனம் ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகளில் போதிய எம்.பி.பி.எஸ். டாக்டர்களை பணியமர்த்தவில்லை. இதன் காரணமாகவே அவை மூடப்பட்டன, என்றார்.

அதே நேரத்தில் ரெயில்வேயின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ‘மேஜிக் தில’் நிறுவனத்தின் நிர்வாகி டாக்டர் ராகுல் குலே நேற்று தானே ரெயில் நிலையத்தில் திடீர் உண்ணாவிரத ேபாராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஒரு ரூபாய் ‘கிளினிக்’ மூலம் ரெயில் பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதுவரை நாங்கள் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உள்ளோம். 2,100 உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. எங்களுக்கு மத்திய ரெயில்வே போதிய காலஅவகாசம் கொடுத்து இருக்கவேண்டும். எங்களது கோரிக்கைக்கு ரெயில்வே செவி சாய்க்காவிட்டால் மற்ற ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகளை நாங்களே மூடிவிடுவோம்’’ என்றார்.

6 ஒரு ரூபாய் ‘கிளினிக்’குகள் மூடப்பட்ட நிலையில், இன்னும் மும்பையில் 8 ‘கிளினிக்’குகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story