மோசமான வைரசுடன் வாழும் கனடா மக்கள்


மோசமான வைரசுடன் வாழும் கனடா மக்கள்
x
தினத்தந்தி 16 Jun 2018 2:27 PM IST (Updated: 16 Jun 2018 2:27 PM IST)
t-max-icont-min-icon

லட்சக்கணக்கான கனடா மக்கள், தங்கள் உடம்பில் ஒரு மோசமான வைரஸ் இருப்பது தெரியாமலே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

1945-ம் ஆண்டுக்கும் 1975-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்த கனடா நாட்டவர்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஹெப்படைட்டிஸ் சி நோய்த்தொற்று இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆனால் அவர்களில் 40 முதல் 70 சதவீதம் பேர் தங்கள் உடலில் அந்த மோசமான வைரஸ் இருப்பது தெரியாமலே வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நீண்டகால நோய்த்தொற்றானது, கல்லீரல் இழை நார் வளர்ச்சி அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இதுகுறித்து டொராண்டோ பல்கலைக்கழகத்தின் கல்லீரல் சிகிச்சை நிபுணர் ஜோர்டான் பெல்டு, மக்கள் அபாயக் காரணிகளின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வயதின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்கிறார்.

கனடா நாட்டில் 1945-க்கும் 1975-க்கும் இடையே பிறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது முக்கால்வாசிப் பேர் ஹெப்படைட்டிஸ் சி உடன் பிறந்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

தங்கள் வயதின் அடிப்படையில் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பரிசோதிப்பதுபோல், இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஹெப்படைட்டிஸ் சி உள்ளதா என பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என தாங்கள் பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார்.

இப்படிச் செய்வதன்மூலம் ஹெப்படைட்டிஸ் சியுடன் வாழும் பெரும்பான்மை மக்களை அடையாளம் காணலாம் என்று ஜோர்டான் கூறுகிறார்.

ஊசி மூலம் போதை மருந்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்பவர்கள், சுத்தமற்ற ஊசிகள் மூலம் பச்சை குத்திக்கொள்பவர்கள், பலருடன் பாதுகாப்பற்ற பாலுறவு கொள்பவர்கள் அல்லது 1992-க்கு முன் ரத்த தானம் அல்லது உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் ஆகியோர் ஹெப்படைட்டிஸ் சி நோய்த்தொற்று அபாயம் அதிகம் உடையவர்கள்.

ஆனால், ஒருவருக்கு ஹெப்படைட்டிஸ் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும் அவர் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், தற்போது அதற்கான சிகிச்சை எளிமையாகிவிட்டது.

முன்பெல்லாம் ஹெப்படைட்டிஸ் சி-க்கான சிகிச்சை கடுமையானது, பக்க விளைவுகளும் அதிகம். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது சில மாத்திரைகள் வீதம் 8 முதல் 12 வாரங்களுக்கு எடுத்தால் போதுமானது. மாத்திரைகள் ஓரளவு விலை அதிகம் என்பது மட்டுமே கவலை தருவது.

நோய்களும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன! 

Next Story