குறுக்குசாலை அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் பலி
குறுக்குசாலை அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டப்பிடாரம்,
குறுக்குசாலை அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதயாத்திரை பக்தர்கள்தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 40). கொத்தனார். இவரும், அதை பகுதியை சேர்ந்த பூ வியாபாரி தென்கரை மகாராஜா (55), முருகன் (43) உள்பட 11 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இரவில் ஓட்டப்பிடாரம் குறுக்குசாலை அருகே உள்ள ஒரு பெருமாள் கோவிலில் தங்கினர்.
பின்னர் நேற்று அதிகாலை 4 மணிக்கு குறுக்குசாலையில் இருந்து அவர்கள் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர். குறுக்குசாலை அருகே வாழசமுத்திரம் பகுதியில் சண்முகவேல், தென்கரை மகாராஜா, முருகன் ஆகிய 3 பேர் மட்டும் கூட்டத்தை பிரிந்து அவர்களுக்கு முன்பு நடந்து சென்றனர்.
2 பேர் பலிஅப்போது எட்டயபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராதவிதமாக அவர்கள் 3 பேர் மீது மோதி விட்டு சென்றது. இதில் சண்முகவேல் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தென்கரை மகாராஜா, முருகன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தென்கரை மகாராஜா பரிதாபமாக இறந்தார். முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்தில் பலியான சண்முகவேல், தென்கரை மகாராஜா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சண்முகவேலுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். தென்கரை மகாராஜாவுக்கு பானுமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.