நெல்லையில் ரம்ஜான் கொண்டாட வந்த இடத்தில் பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டீக்கடைக்காரர் பலி மனைவி, மகன் படுகாயம்
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டீக்கடைக்காரர் பலியானார். அவருடைய மனைவி, மற்றும் மகன் பலத்த காயம் அடைந்தனர்.
நெல்லை,
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டீக்கடைக்காரர் பலியானார். அவருடைய மனைவி, மற்றும் மகன் பலத்த காயம் அடைந்தனர்.
ரம்ஜான் கொண்டாட்டம்நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் அனிபா (வயது 35). இவர் அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பரக்கத் (31). இவர்களுடைய மகன் ஷேக் தாவூத் (8). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 3–வது வகுப்பு படித்து வருகிறான்.
அனிபாவுக்கு சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள தருவை கிராமம் ஆகும். நேற்று ரம்ஜான் பெருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதையொட்டி நேற்று காலை அனிபா, பரக்கத், ஷேக் தாவூத் ஆகியோர் தொழுகையை முடித்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி புறப்பட்டனர்.
நெல்லை டவுனில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் குடும்பத்தினருக்கு தேவையான புத்தாடைகளை வாங்கினார்கள். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். கொக்கிரகுளம், மேலப்பாளையம் வழியாக தருவைக்கு செல்வதற்காக டவுன் ஆர்ச்சை கடந்து கொக்கிரகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
லாரி மோதி பலிஅப்போது இவர்களுக்கு பின்னால் ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று அனிபா மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனிபா, பரக்கத், ஷேக் தாவூத் ஆகிய 3 பேரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் அனிபா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பரக்கத், ஷேக் தாவூத் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை அறிந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் தங்களது ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு உடனடியாக நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அனிபா உடலையும் பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தால் நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரம்ஜான் கொண்டாட வந்த இடத்தில் அனிபா பலியானது அவருடைய குடும்பத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் புளியங்குடியை சேர்ந்த மாரிக்கண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.