விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின்போது குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின்போது குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 17 Jun 2018 3:30 AM IST (Updated: 17 Jun 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின்போது குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம்– சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் ரூ.36 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

இப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதமே முடிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேம்பால பணிகள் மிகவும் மந்தகதியிலே நடந்து வந்தது. தற்போதுதான் இறுதிக்கட்டமாக மேம்பாலத்திற்கு கீழே அணுகுசாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் விழுப்புரம் மார்க்கத்தில் இடதுபுறம் அணுகுசாலை அமைக்கும் இடத்தில், 35 மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் புதைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இப்பணியின்போது பாதாள சாக்கடை தொட்டியை உடைத்தபோது குடிநீர் குழாயையும் சேர்த்து உடைத்துவிட்டனர். இது ஒரு மாதத்திற்கு மேலாகியும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால் குடிநீர், வீணாக வெளியேறி அங்குள்ள பள்ளத்தில் குட்டைபோல் தேங்கியது.

இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வடக்கு தெரு, கமலா நகர், கைவல்லியர் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, மாசிலாமணிபேட்டை, வாலாஜா பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பாதாள சாக்கடை தொட்டியையும் சரிசெய்யாமல், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் சரிசெய்யாமல் பெயரளவிற்கு மண்ணை போட்டு மூடிவிட்டனர். இருப்பினும் தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டே இருக்கிறது. பாதாள சாக்கடை குழாய்கள் புதைக்கும் பணி முடிந்தால்தான் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய முடியும். ஆனால் இந்த பணியை முடிக்காமல் நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story