விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஏ.சி. மெக்கானிக் சாவு
ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தஞ்சாவூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு ரெயிலில் புறப்பட்ட ஏ.சி. மெக்கானிக் விழுப்புரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து் பலியானார்.
விழுப்புரம்,
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் உசேன் மகன் உஸ்மான் (வயது 24). ஏ.சி. மெக்கானிக். இவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தஞ்சாவூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு ரெயிலில் புறப்பட்டார்.
ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. நள்ளிரவில் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த சாத்தனூர் ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்தது. அப்போது தூக்க கலக்கத்தில் உஸ்மான், ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உஸ்மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.