ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 17 Jun 2018 4:15 AM IST (Updated: 17 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கரூர்,

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைவர் நாசர் அலி தலைமை தாங்கி தொழுகையை நடத்தினார். இதில் கடைவீதியிலுள்ள சின்னபள்ளிவாசல் மக்களும் பங்கேற்றனர். அப்போது நோன்பின் மகத்துவம் குறித்தும், ஏழை- எளியவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாவின் பேரருளை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஏழை-எளியவர்களுக்கு பொருளுதவி, பண உதவி உள்ளிட்டவற்றை செய்தனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி காலை 10 மணிக்கு பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் தொழுகை நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி பெரியபள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் வாங்கபாளையம் நூருல் இஸ்லாம் பள்ளி வாசல் உள்பட 35-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா சாய் கார்டனில் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது வானில் பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும், பிறையை பார்த்து நோன்பை முடித்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நபிகள் நாயகம் கூறிய போதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அப்துல்ஹமீது கலந்து கொண்டு அன்பு, அறம், தர்மம், ஏழைகளுக்கு உதவுதல் என இஸ்லாம் கூறும் நற்போதனைகளை பற்றி விளக்கி கூறினார்.

அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நாட்டில் மேலோங்கவும், வன்முறை இல்லாமல் அன்பின் வழியில் வாழ்வு செல்வதற்கும் தொழுகையில் பங்கேற்ற குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோர் வழிபாடு செய்தனர். பள்ளி வாசல் மற்றும் தொழுகை நடந்த மைதானங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் வகையில் யாரேனும் ஈடுபடுகின்றனரா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூரில் முஸ்லிம்கள் பலரும் தங்களது வீடுகளில் சமைத்த உணவினை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அன்பை வெளிகாட்டியதை காண முடிந்தது. ரம்ஜானையொட்டி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை படுஜோராக நடந்தது. இந்த நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கரூர்- வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கூடம் மட்டும் பூட்டியபடியே இருந்தது. எனவே அதனை பயன் பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story