நின்ற லாரி மீது கார் மோதி சென்னை தம்பதி சாவு மகன் படுகாயம்


நின்ற லாரி மீது கார் மோதி சென்னை தம்பதி சாவு மகன் படுகாயம்
x
தினத்தந்தி 17 Jun 2018 4:00 AM IST (Updated: 17 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த கணவன்–மனைவி பரிதாபமாக இறந்தனர். மகன் படுகாயம் அடைந்தார்.

பெருந்துறை,

சென்னை நாவலூர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 71). அவருடைய மனைவி புஷ்பா (57). இவர்களுடைய மகன் ரிச்சர்டு (28). இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த மரிய ஏஞ்சலுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரிய ஏஞ்சல் கோவையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

ரிச்சர்டுக்கும், மரிய ஏஞ்சலுக்கும் தாலி மாற்றும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக ரிச்சர்டு தனது பெற்றோருடன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கோவைக்கு சென்றுகொண்டிருந்தார். காரை ரிச்சர்டு ஓட்டினார்.

கார் நேற்று காலை 7.40 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பூவம்பாளையம் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது ரோட்டோரம் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இதை ரிச்சர்டு கவனிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் கார் மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய வின்சென்ட்டும், புஷ்பாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள். ரிச்சர்டு படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியின் அடியில் சிக்கிய காரின் பாகத்தை உடைத்து ரிச்சர்டை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story