டாக்டர்கள் குறித்து பொய் பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை தமிழக மருத்துவ கவுன்சில் வேண்டுகோள்
டாக்டர்கள் குறித்து பொய் பிரசாரம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மருத்துவ கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காரைக்குடி,
தமிழக மருத்துவ கவுன்சில் துணைத்தலைவர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இதயம், கல்லீரல், நுரையீரல் கிட்னி மற்றும் குடல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழக டாக்டர்கள் உலகிற்கே வழிகாட்டும் விதத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்திய அளவில் கலங்கரை விளக்காக விளங்கி தொடர்ந்து 3–வது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர், தமிழக டாக்டர்கள். இந்தியாவிலேயே உறுப்பு மாற்று சிகிச்சை முறைகளை ஒழுங்குப்படுத்தும் ஆணையம் தமிழகத்தில் தான் முதன்முதலாக தன்னாட்சி அமைப்பாக அமைக்கப்பட்டது. எந்தவித தலையீடுகளும் இன்றி தகுதி வாய்ந்தவர்களுக்கு ஏறத்தாழ 5 ஆயிரத்து 933 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைககள் ஆயிரத்து 56 பேரிடம் தானமாக பெற்று தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில் சில தனிநபர்கள் விளம்பரத்திற்காக, மருத்துவத்தில் வியாபாரம் நடக்கிறது, ஊழல் நடக்கிறது என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். சில அரசியல் கட்சிகளும் உண்மை அறியாது இந்த பிரசாரத்திற்கு துணை போகிறார்கள். இதனால் உறுப்பு மாற்று உன்னத சிகிச்சை மட்டுமின்றி, பல்வேறு சிகிச்சை முறைகள் பாதிக்கப்பட்டு அதனால் உலகம் முழுவதும் பாராட்ட பெற்ற டாக்டர்களின் சேவை தமிழகத்தில் ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த செயலை தமிழக மருத்துவ கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. எனவே இதனை தடுக்க பொய் பிரசாரம் செய்யும் நபர்கள் மீது தமிழக அரசு இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.