தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2018 4:00 AM IST (Updated: 17 Jun 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆறு இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தாலும், போதிய மழை இல்லாததாலும் ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து இருந்தது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருகிறது. அத்துடன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தமிழக முதல்–அமைச்சர் ஆணைப்படி குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து கடந்த 15–ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த சிலர் அமராவதி ஆற்றில் இருந்து விவசாய நிலத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் திருடுவதாக புகார் எழுந்தது. இதனால் குடிநீர் பயன்பாடு பாதிக்கும் சூழ்நிலை உருவானது. எனவே இதுபோன்று அமராவதி ஆற்றில் தண்ணீர் திருடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story