தேனி அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த 2 பேர் தவிப்பு தீயணைப்பு படையினர் மீட்டனர்


தேனி அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த 2 பேர் தவிப்பு தீயணைப்பு படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 17 Jun 2018 3:30 AM IST (Updated: 17 Jun 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த 2 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தேனி,

தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய விவசாய தோட்டம் அதே பகுதியில் உள்ளது. அங்கு அவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் ஒரு ஆட்டுக்குட்டி விழுந்து விட்டது.

அது சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு. சுமார் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. ஆட்டுக்குட்டி விழுந்ததும் அதை காப்பாற்றுவதற்காக தோட்டத்தில் வேலை பார்க்கும் அதே ஊரைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது 42) என்பவர் கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால், அவரால் ஆட்டுக்குட்டியை மேலே தூக்கி வர முடியவில்லை. மேலும், நீண்ட நேரம் தண்ணீருக்குள் ஆட்டுக்குட்டியை பிடித்துக் கொண்டு நின்றதால் அவராலும் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்தார். அவருடைய சத்தம் கேட்டு தோட்ட உரிமையாளர் ராஜா அங்கு வந்தார். அவர் கிணற்றுக்குள் குதித்து சர்வேஸ்வரனையும், ஆட்டுக்குட்டியையும் காப்பாற்ற முயன்றார்.

கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் அவராலும் மேலே ஏறி வர முடியவில்லை. ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற 2 பேரும் கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிக்கு பயன்படுத்தும் ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, ராஜா, சர்வேஸ்வரன் ஆகிய 2 பேரையும், ஆட்டுக்குட்டியையும் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story