சிறுமலை அடிவாரம் அருகே 200 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து மூதாட்டி பலி; 15 பேர் படுகாயம்
சிறுமலை அடிவாரம் அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து மூதாட்டி பலியானார். கர்ப்பிணி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 23), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (20). இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையொட்டி, நேற்று அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக நத்தம் புன்னப்பட்டியில் உள்ள அவருடைய தந்தை முருகன் (40) மற்றும் உறவினர்கள் ஏலம்மாள் (70), மணி (42), கார்த்திகா (14) உள்பட 15 பேர் ஒரு மினிவேனில் பழையூருக்கு வந்தனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரசவத்திற்காக ராஜேஸ்வரியை தாய் வீட்டுக்கு அழைத்து கொண்டு ஏலம்மாள் உள்பட 16 பேரும் அதே வேனில் புறப்பட்டனர்.
வேனை லிங்கவாடியை சேர்ந்த விஜய் (24) ஓட்டினார். இந்த வேன் நேற்று மாலை சிறுமலை அடிவாரம் அருகே மலைப்பாதையில் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வேனின் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் வேனை மோதி நிறுத்த முயன்றார்.
அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த ஏலம்மாள், ராஜேஸ்வரி உள்பட 16 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏலம்மாள் பரிதாபமாக பலியானார். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.