மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு


மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jun 2018 4:52 AM IST (Updated: 17 Jun 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப் பட்டணம், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக் கோட்டை, சூளகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் ராயக் கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதே போல கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

தேன்கனிக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பல்லி என்ற இடத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜானை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினர்களுக்கும் வழங்கினார்கள். மேலும் இனிப்பு வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.

Next Story