ரூ.1¾ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்


ரூ.1¾ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:45 AM IST (Updated: 18 Jun 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் நகராட்சி பகுதியில் ரூ.1¾ கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

ஓசூர் நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள், மூக்கண்டபள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் கட்டிடம், ஜூஜூவாடியில் ரூ.8.50 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், பேடரபள்ளியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மற்றும் சின்ன எலசகிரியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இவற்றை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசும் போது கூறியதாவது:-

ஓசூர் நகராட்சியில் பொதுமக்கள் நலன் கருதி, குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் சிறுவர் பூங்காக்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சியில், தற்போது ரூ.140 கோடி மதிப்பில் குடிநீர் வழங்க திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில், 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் பண்டரிநாதன், ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, முரளி, ஜெயப்பிரகாஷ், நாராயணரெட்டி உள்்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story