ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி: ரங்கராஜன் எம்.பி.குற்றச்சாட்டு


ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி: ரங்கராஜன் எம்.பி.குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jun 2018 4:45 AM IST (Updated: 18 Jun 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ரங்கராஜன் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ரங்கராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஏற்படக் கூடிய தொழில் நெருக்கடியின் காரணமாக, ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சாலைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடு விழாக்களை கண்டு கொண்டு இருக்கிறது.

அரசின் கொள்கை காரணமாக தொழில் முனைவோர், உழைப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மாநில அரசு இது குறித்து பொருட் படுத்தாமல் இருப்பது இன்னொரு துயரமான பகுதி. இதற்கான மாற்று வழி கண்டுபிடிக்க ராஜபாளையத்தில் கூட்டம் நடத்தி அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத்திலும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க உள்ளோம்.

முரண்பட்ட கருத்துகளை நீதிபதிகள் கொடுப்பது புதிதல்ல. அரசியல் நெருக்கடியை உருவாக்கி கொண்டே இருக்கும் போது, கால தாமதப்படுத்தாமல் தீர்ப்புகள் வழங்க முடியும் என்றால் நீதிமன்றம் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் ஜனநாயக செயல் பாட்டை மேலும் முடக்கும் என்பது எனது கருத்து. இவ்வாறு கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அயன்நத்தம்பட்டி ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச் சுவர்கட்டுவதற்கு ரங்கராஜன் எம்.பி. ரூ.29 லட்சம் ஒதுக்கினார். இதற்காக நடந்த பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

விழாவிற்கு பள்ளி தாளாளர் திருத்துவராஜ் தலைமை தாங்கினார். தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ராணி வரவேற்றார். விழாவில் ரங்கராஜன் பேசுகையில், மாணவர்களுக்கு கணினி அறிவை வளர்க்கும் பொருட்டு 10 கணினிகள் தனது நிதியில் இருந்து வழங்குவதாக அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, முருகேசன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கமிட்டி உறுப்பினர் மணிக்குமார் மற்றும் உதவி பங்குதந்தை சார்லஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவரை ஊர் எல்லையில் இருந்து மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்து மேளதாளத்தோடு அழைத்து வந்தனர். 

Next Story