பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 18 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

குழந்திரான்பட்டு கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்திரான்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா, கால்நடை மருத்துவ கிளை திறப்பு விழா மற்றும் புதிய பஸ் வழித்தடம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மக்கள் நல்வாழ்்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.கே.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்கள்.

அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் .கே.ராஜூ பேசுகையில், “பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தித்துறையின் மூலம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்் பேசுகையில், “தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 125 கால்நடை கிளை நிலையங்களை திறக்க அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 3 கால்நடை கிளை நிலையங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் முயற்சியால் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் கூறியதாவது, இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும். சென்ற ஆண்டு பொதுமக்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று ஓராண்டு காலத்திற்குள் அரசால் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் இங்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சினை ஊசிப் போடுதல், முதலுதவி சிகிச்சை, சினை பரிசோதனை மற்றும் பிற சிகிச்சைகள் கால்நடைகளுக்கு வழங்கப்படும்.

மேலும் பொதுமக்களின் மற்றொரு கோரிக்கையான பகுதி நேர நியாயவிலை கடையை இங்கு அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி உதவி பேராசிரியர் தங்க.ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story