திண்டுக்கல்லில் மாநில அளவிலான சப்–ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள்


திண்டுக்கல்லில் மாநில அளவிலான சப்–ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள்
x
தினத்தந்தி 18 Jun 2018 3:45 AM IST (Updated: 18 Jun 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மாநில அளவிலான சப்–ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் ரூ.4¼ கோடி செலவில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட இறகுப்பந்து கழகம், உள்விளையாட்டு அரங்க கமிட்டி சார்பில் தமிழ்நாடு சப்–ஜூனியர் மாநில தரவரிசைக்கான இறகுப்பந்து போட்டிகள் 6 நாட்கள் நடக்கிறது.

இதற்கான தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அதன்படி இந்த ஆண்டு பல்வேறு பணிகளுக்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.191 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2–வது பெரிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கு திண்டுக்கல்லில் திறக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு குளிர்சாதன வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இது குறித்து முதல்–அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நன்கொடையாளர்கள் மூலமாகவும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, தூத்துக்குடியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கு கட்டப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. அரசு 3 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார்கள். ஆனால், 16 மாதங்களை நிறைவு செய்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது. அரசுக்கு எதிரான புரட்சிகள், போராட்டங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூள்தூளாக்கி இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசியதாவது:–

மாணவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க 23 விடுதிகள் செயல்படுகின்றன. மேலும் 17 மாவட்டங்களில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் விளையாட்டு போட்டி நடத்த ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த ரூ.2½ கோடியும், மாநில அளவில் போட்டிகள் நடத்த ரூ.8 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் தேசிய, சர்வதேச அளவிலான 145 வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.13½ கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து உள்விளையாட்டு அரங்குக்கு நன்கொடை அளித்தவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் வி.மருதராஜ், உள்விளையாட்டு அரங்க கமிட்டி தலைவர் ஜி.சுந்தரராஜன், செயலாளர் எஸ்.சண்முகம், மாவட்ட இறகுப்பந்து கழக தலைவர் இ.என்.பழனிச்சாமி, செயலாளர் வி.நாராயணன், கமிட்டி உறுப்பினர்கள் நாட்டாண்மை காஜாமைதீன், பி.ஜோதிமுருகன், ஆர்.ரமேஷ்பட்டேல், செண்பகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு கேலரி அமைக்க வேண்டும். தற்போதுள்ள கேலரிக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மாநில இறகுப்பந்து போட்டியில் பங்கேற்க மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 686 மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அவர்களில் 15 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் மாணவ, மாணவிகள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டை பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் 3 நாட்கள் தகுதிச்சுற்று போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 1,135 ஆட்டங்கள் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 22–ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.


Next Story