அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது, டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது, டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2018 5:00 AM IST (Updated: 18 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது என்று கோபியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

கடத்தூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள்ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது டி.டி.வி.தினகரனுடன் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் அமரன், நகர அ.ம.மு.க. செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story