புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், நிதி ஆயோக் கூட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், நிதி ஆயோக் கூட்டத்தில் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2018 5:15 AM IST (Updated: 18 Jun 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக பெருக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவேண்டும். இதற்காக புதுச்சேரியில் 2 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்வளம் தொடர்பாக அறிந்துகொள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரிசோதனை மையங்கள் அமைத்துள்ளோம். அவற்றின் மூலம் வழங்கப்படும் மண் சுகாதார அட்டைகள் மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு உதவும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.42 கோடியே 66 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 1,767 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சிறிய மாநிலங்களின் வரிசையில் புதுச்சேரி வேளாண்துறையில் சிறந்து விளங்குகிறது. இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகளின் வருமானமும் உயர்ந்துள்ளது. தோட்டக்கலை பயிர்கள் உற்பத்திக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு மூலம் பால்பண்ணை, தேனீ வளர்ப்பு போன்றவற்றால் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. பால்வளத்தை பெருக்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு உதவிகள் வழங்கவேண்டும்.

பிரசவத்தின்போது குழந்தை இறப்பு என்பது 1000–க்கு 10 ஆகவே உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியைவிட குறைவானதாகும். இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை காலத்தில் மாதந்தோறும் ரூ.500 நிதியுதவி வழங்கப்படுகிறது.

நீண்ட நாட்களா தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளில் சிறப்பு கவனங்களை மத்திய அரசு செலுத்த வேண்டும். இதன்படி

* சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கவேண்டும்.

* மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியையும் இணைத்து மற்ற மாநிலங்களுக்கு நிதி வழங்குவதுபோல் வழங்கவேண்டும்.

* வருடந்தோறும் மத்திய அரசு 10 சதவீதமாவது மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும்.

* மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு தற்போது 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. மீதி 40 சதவீத நிதியை மாநில நிதியிலிருந்து செலவிடுகிறோம். மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவதுபோல் 90 சதவீத நிதியை புதுச்சேரிக்கு வழங்கவேண்டும்.

* புதுவை மாநிலத்தின் கடந்த கால கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்.

* 7–வது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கப்பட்டுள்ளதால் அதற்கான நிலுவைத்தொகையை புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கவேண்டும்.

* வெளிமார்க்கெட்டில் கடன் பெற புதுச்சேரிக்கு அனுமதி அளிக்கவேண்டும்.

* புதுவை யூனியன் பிரதேசத்தில் தொழில் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்களை வழங்கவேண்டும்.

* ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க அதற்கு சொந்தமான நிலத்தை விற்க அனுமதிக்கவேண்டும்.

* புதுவை துறைமுகம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.


Next Story