கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது


கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது
x
தினத்தந்தி 18 Jun 2018 5:35 AM IST (Updated: 18 Jun 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று, மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி பரமேஸ்வரை பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் 2 பேரும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய பட்ஜெட் தாக்கல், பொது செயல் திட்டம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவது, அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது. யாருக்காவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கட்சி கூட்டத்தில் அதை தெரிவித்து அதற்கு தீர்வு கண்டுகொள்ளலாம்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஏற்கனவே ஆலோசனை நடந்துள்ளது. அரசின் நிதிநிலை அடிப்படையில் கடன் தள்ளுபடி குறித்து முதல்-மந்திரி முடிவு எடுப்பார். விவசாயிகளுக்கு உதவும் விஷயத்தில் காங்கிரஸ் எப்போதும் ஆதரவு அளிக்கும். ஊடகங்களும் கூட்டணி அரசுக்கு சிறிது காலஅவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு கருத்திலும் வேறு அர்த்தத்தை கண்டுபிடிக்க வேண்டாம்.

மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். நிலைமை அவ்வாறே இருக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அதன்படி ஆட்சி நிர்வாகம் நடைபெற வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். புதிய பட்ஜெட் தாக்கல் விஷயத்தில் சித்தராமையா எந்த அர்த்தத்தில் கருத்து கூறினார் என்பது தெரியவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார். 

Next Story