பணிமாறுதலுக்கான கலந்தாய்வு: காலிப்பணியிடங்களை மறைத்தாக கூறி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்களை மறைத்தாக கூறி கலந்தாய்வு நடைபெற்ற வளாகத்தின் முன்பு ஆசிரியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
தற்போது ஆசிரியர்களின் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டத்திற்கு இடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆன்–லைன் மூலம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வின் போது ஆசிரியர்களுக்கு தென் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைக் கண்டித்து ஆசிரியர்கள் சார்பில் கலந்தாய்வு நடைபெற்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் இளங்கோவன், மாவட்ட தலைவர் சின்னச்சாமி, மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி பேச்சுவா£த்தை நடத்தினார்.