பள்ளி பஸ் மீது கல்லூரி பஸ் மோதியதில் 20 பேர் காயம் மது அருந்திருந்த டிரைவர் கைது


பள்ளி பஸ் மீது கல்லூரி பஸ் மோதியதில் 20 பேர் காயம் மது அருந்திருந்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2018 3:15 AM IST (Updated: 19 Jun 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

நின்று கொண்டிருந்த பள்ளி பஸ் மீது கல்லூரி பஸ் மோதியதில் மாணவ-மாணவிகள் 20 பேர் காயம் அடைந்தனர். கல்லூரி பஸ்சை மது அருந்தி ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

குன்னம்,

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ஒன்று நேற்று காலையில் குன்னம் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றி செல்வதற்காக வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் அந்தூர் கிளியூருக்கு வந்த போது, திடீரென்று எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் கல்லூரி பஸ்சில் இருந்த மாணவிகள் சரண்யா (வயது 19), ஜெயலட்சுமி (18) உள்பட 6 பேரும், தனியார் பள்ளி பஸ்சில் இருந்த மாணவர்கள் சாய்சரண் (5), ராஜபிரியா (13), மாதவன் (12), விஜயகுமார் (11), குமார் (13), மணிமாறன் (14), சுவாதி (14) உள்பட 14 பேர் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொது மக்களும், குன்னம் போலீசாரும், காயமடைந்த மாணவ-மாணவி களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தனியார் பள்ளி மாணவிகள் நிவேதா (15), வினோதினி (15) ஆகியோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த ராஜா (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது அருந்தி பஸ்சை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Next Story