சிலட்டூர் சந்தைப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு


சிலட்டூர் சந்தைப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 19 Jun 2018 4:00 AM IST (Updated: 19 Jun 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிலட்டூர் சந்தைப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முகமது ஜாஹீர் ஹூசைன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குளத்தூர் தாலுகா லெட்சுமணன்பட்டி பகுதியை சேர்ந்த ராசு, குமார் ஆகியோர் குடும்பத்தினருடன் கொடுத்த மனுவில், “நாங்கள் பல ஆண்டுகளாக லெட்சுமணன்பட்டியில் உள்ள நிலத்தில் கடலை, உளுந்து போன்ற தானிய வகைகளை விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை வைத்து நாங்கள் வங்கியில் விவசாய நகைக்கடன் பெற்று உள்ளோம். இந்நிலையில் அந்த இடத்தை போலியாக பத்திரம் செய்து, கணினி சிட்டாவை மாற்றி எங்களை மிரட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கூறியிருந்தனர்.

அறந்தாங்கி சிலட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “சிலட்டூர் புதுக்குளம் சந்தைப்பாதையும், புதுக்குளம் கள்ளாங்குளம் செல்லும் பாதையும் நீண்ட காலமாக இருந்து வருகி றது. இந்த பாதை விவசாயத்திற்கு மட்டும் அல்லாமல், அறந்தாங்கி சந்தைக்கு செல்லவும் பயன்பட்டு வருவதால் இந்த பாதை சந்தைப்பாதை என அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாதையை பலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் இந்த பாதை தற்போது மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த வழியாக விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நட வடிக்கை எடுத்து சந்தைப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்“ என கூறியிருந்தனர்.

Next Story