காளவாசல் மேம்பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
காளவாசல் மேம்பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம், மதுரை ஜீவா நகர் 1–வது தெருவில் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பெரியார் பாசறையில் வளர்ந்த சாமானியர்கள் கூட மிகப்பெரிய பதவிக்கு வரமுடியும் என்று வித்திட்டவர் அண்ணார். தற்போது முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம், ஏன் நான் கூட பெரியார் பாசறையில் வந்தவர்கள் தான். இந்த ஆட்சி 100 நாளில் போகும் என்று கனவு கண்டார்கள். ஆனால் அது பகல் கனவாக போனது. எம்.ஜி.ஆர் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். சேலை கட்டிய சிங்கமாக இருந்த ஜெயலலிதா 6 முறை முதல்–அமைச்சர் ஆனார். 39 எம்.பி.க்கள் பெற்று இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாக அ.தி.மு.க. இருக்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறோம்.
தமிழர்கள் அனைவரும் பயன்பெறும் வரையில் பல திட்டங்களை செயல்ப்டுத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள். நீட் தேர்வுக்கு ஸ்டாலின் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் இந்த தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது கூட்டணியில் இருந்த தி.மு.க. எந்த எதிர்ப்பையும் பதிவு செய்ய வில்லை.
காவிரி பிரச்சினை, முல்லை அணை பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். தி.மு.க. செய்த 2ஜி ஊழலால் சந்தி சிரித்தது. ஆனால் அதி.மு.க. ஊழல் செய்கிறது என்று தி.மு.க. பொய் பிரசாரம் செய்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம்–ஒழுங்கு கெட்டு போகும். ஆட்டம் போடுவார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த நலனும் ஏற்பட போவதில்லை.
மதுரை மாவட்டத்திற்கு பல திட்டம் வருகிறது. காளவாசல், கோரிப்பாளையம், புனிதமரியன்னை முதல் ஜெயவிலாஸ் வரை, பெரியார் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. அதில் காளவாசல் மேம்பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. ரூ.1,440 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எங்களுக்கு மக்கள் தான் நீதிமான்கள். நாங்கள் அவர்களுக்கு சேவகர்கள்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் புதூர் துரைப்பாண்டியன், ஆவின் தங்கம், ஜெ.ராஜா, முன்னாள் மேயர் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.