டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கிரண்பெடி மீது நாராயணசாமி சரமாரி குற்றச்சாட்டு, ராஜ்நாத்சிங் எதிர்ப்பால் சலசலப்பு
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி மீது நாராயணசாமி சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார். இதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. மக்கள் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கிறார். மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதுடன் உரிமைகளை தட்டிப்பறிக்கிறார். கவர்னரின் செயல்பாடுகளால் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என முதல்– அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே அவர் நேரடியாக புகார் தெரிவித்து இருந்தார்.
இதற்கெல்லாம் பதிலளித்து, புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டு வருவதாக கிரண்பெடி தெரிவித்தார்.
இந்தநிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி இதில் கலந்து கொண்டு பேசினார். மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசி விட்டு கவர்னர் கிரண்பெடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது நாராயணசாமி கூறுகையில், ‘புதுவை மாநில நிர்வாகி அரசு முடிவுகளை கூட டுவிட்டர், வாட்ஸ்அப், பேஸ் புக் என அங்கீகரிக்கப்படாத சமூக வலைதளங்களில் எல்லாம் வெளியிடுகிறார். இந்த ஊடகங்கள் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அரசு நடவடிக்கைகளில் தலையிட்டு செயல்பட விடாமல் தடுக்கிறார்’ என்று சரமாரியாக புகார் தெரிவித்தார்.
ஏற்கனவே மாநில நிர்வாகி குறித்து புகார் தெரிவித்து அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதுகுறித்து தற்போது நினைவூட்ட விரும்புகிறேன் என்று கூறி தொடர்ந்து நாராயணசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நிதி ஆயோக் கூட்டத்தின் அலுவல் பட்டியலில் இதுகுறித்த விவரம் இடம்பெறவில்லை. எனவே அது பற்றி இங்கு பேச அனுமதி இல்லை என்று அவர் கூறினார்.
அனைத்து மாநில முதல்– அமைச்சர்களும் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தில், கவர்னர் மீது குற்றச்சாட்டு தெரிவித்து நாராயணசாமி பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.