புதுவையில் நாளை நிதிநிலை குறித்த விளக்க கூட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கு நாராயணசாமி அழைப்பு


புதுவையில் நாளை நிதிநிலை குறித்த விளக்க கூட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கு நாராயணசாமி அழைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 4:15 AM IST (Updated: 19 Jun 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நாளை (புதன்கிழமை) நிதிநிலை குறித்த விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் அரசு தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை கூட செயல்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி வரும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு பொறுப்பேற்ற 24 மாதங்களில் பொதுமக்களுக்கு 7 மாதங்களே இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிநிலை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த ரூ.930 கோடி தேவைப்படுகிறது என்று கணக்கிடப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அதில் மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும், புதுவைக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் மானியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், புதுவைக்கான கடந்த கால கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்பட்டு 2 நாட்களே நடந்த நிலையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. புதுவை மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததே இதற்கு காரணமாகும். டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்– அமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் இதுகுறித்து பேசி ஒப்புதல் பெற முயற்சிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் புதுவை மாநில நிதிநிலை தொடர்பான விளக்க கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்குகின்றார். கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர், அரசு துறை செயலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கூட்டத்தில், பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களை நாராயணசாமி விளக்கம் அளிக்கிறார். நாளைக்குள் (புதன்கிழமை) பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தராவிட்டால் அதற்கான காரணம் குறித்தும், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.


Next Story