மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது திருநாவுக்கரசர் பேச்சு


மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 19 Jun 2018 3:02 AM IST (Updated: 19 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் ஆனதில் இருந்து மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என திருநாவுக்கரசர் கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி செயல் வீரர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். வக்கீல் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் வரவேற்றார்.

கூட்டத்தின்போது பண்ணவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாதம்பி பேசினார். அப்போது அவர், மேடையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் குறித்து ஏதோ கூறினார். அதற்கு சிங்காரம் எழுந்து பதில் கூற முயன்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. அவை 72 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 26-வது மாவட்டமாக தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. எந்த மாவட்டத்திலும் எந்தவித பிரச்சினையும் இல்லை.

இங்கு இப்போது நடந்தது போல, எந்த மாவட்டத்திலும் பிரச்சினை நடக்கவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை ஊடகங்களும், மற்ற கட்சிக்காரர்களும் பெரிதுபடுத்தி விடுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இதுவரை 35 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறோம். இதை 50 லட்சமாக உயர்த்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உள்ள 75 துணை அமைப்புகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

நாளை(இன்று) நான் டெல்லி சென்று தலைவர் ராகுல் காந்தியை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்க இருக்கிறேன். அடுத்த ஆண்டு(2019) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வந்து விடும்.

சட்ட சபையில், சபாநாயகரால் நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட தீர்ப்பில் 2 நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பு கூறி இருக்கிறார்கள். இன்றைக்கு நீதி, திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்த மோடியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள். மோடியை போல யாரும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதில்லை. மோடியின் ஆட்சி ஏழை மக்களின் ஆட்சியல்ல. மத்திய அரசு கோடீஸ்வரர்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆனதில் இருந்து மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வாக்குள்ள ஆட்சி இல்லை.

இன்றைக்கு இந்தியாவில் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி தான் மோடிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாதம்பி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் மவுலானா, மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணிராஜ், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், கே.மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைமாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story