2 கி.மீ. தூரம் தண்ணீர் எடுக்க செல்லும் அவலம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தல்


2 கி.மீ. தூரம் தண்ணீர் எடுக்க செல்லும் அவலம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2018 3:13 AM IST (Updated: 19 Jun 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூரில் 6 மாதமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் 2 கி.மீ. தூரம் வரை சென்று பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது திருமங்கலக்கோட்டை கீழையூர் ஆதிதிராவிடர் தெரு. இந்த தெருவில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணறு செயல் இழந்து விட்டதால் அந்த பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் வரை சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அதன் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி நீர் தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதமாக ஆழ்துளை கிணறு செயல் இழந்து விட்டது.

இதனால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். கலெக்டரிடமும் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Next Story