2-வது திருமணம் செய்தவரை ஏமாற்றி நகை-பணத்துடன் ஓட்டம் ஆந்திர பெண்ணுக்கு வலைவீச்சு
2-வது திருமணம் செய்தவரை ஏமாற்றி அவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் இருந்த நகை-பணத்துடன் ஓட்டம்பிடித்த ஆந்திர பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் எம்.ஆர்.நாயுடு தெருவை சேர்ந்தவர் வெங்கட்ரமணா (வயது 53). இவர் ஐ.சி.எப். பணிமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி குடும்ப தகராறு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று சென்றுவிட்டார்.
இந்நிலையில் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்த வெங்கட்ரமணா திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதன்மூலம் அறிமுகமான ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த பசந்தாரி ரமணம்மா (35) என்பவரை கடந்த மாதம் 2-ந்தேதி வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் 2-ம் திருமணம் செய்துகொண்டார்.
2-வது மனைவி ஓட்டம்
திருமணத்தில் ரமணம்மாவின் உறவினர்கள் யாருமின்றி நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான நாள் முதலே ரமணம்மாவின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்தது. கடந்த மாதம் 26-ந்தேதி வெங்கட்ரமணா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். வீடு பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அக்கம்பக்கத்தில் தனது மனைவி குறித்து விசாரித்தார்.
அப்போது சிலர் அவரது மனைவி சூட்கேசுடன் வெளியே சென்றதாக தெரிவித்தனர். இதனால் அவர் மாற்று சாவி மூலம் பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தனது மனைவியின் உடைகள், 4 சவரன் தங்க நகை மற்றும் ரூ.80 ஆயிரத்துடன் ரமணம்மா வெளியேறியது தெரியவந்தது.
போலீசில் புகார்
உடனே அவர் தனது மனைவிக்கு போன் செய்து பேசியபோது, தான் வெளியூருக்கு செல்வதாகவும், 2 நாளில் திரும்பிவருவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் அவரது மொபைல் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுவிட்டது. பலமுறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
திருமண தகவல் மையம் மற்றும் நண்பர்கள் மூலம் பல இடங்களில் விசாரணை செய்தும் மனைவி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் வெங்கட்ரமணா இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமணம்மாவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story