கருவூல அலுவலர்களுக்கு திறனூட்டல் பயிற்சி


கருவூல அலுவலர்களுக்கு திறனூட்டல் பயிற்சி
x
தினத்தந்தி 19 Jun 2018 4:02 AM IST (Updated: 19 Jun 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கருவூல அலுவலர்களுக்கான திறனூட்டல் பயிற்சியை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகத்தின் மூலம், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான திறனூட்டல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம், அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும். அரசுப்பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப்பணியாளர்களின் பணி விவரங்கள் முழுமையாக இந்த திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது.

இதனால், பணி மாறுதலாகி செல்லும் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளின் பதிவு விவரங்களில் ஏற்படும் காலவிரயம் மற்றும் சிரமங்கள் குறையும். பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் கணினி ஆவணங்கள் உதவும்.

இந்த பயிற்சி வகுப்பில், வரவு-செலவு திட்ட நடைமுறைகள், சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பட்டியல்கள் தயாரித்தல், மின்னணு பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் குறித்து கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், முதன்மை அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுவரை அரசுப்பணியாளர்களின் விவரங்கள் பணிப்பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர்கள் மூலம் பதிவு செய்வதில் இருந்த தவறுகள் அனைத்தும், இந்த கணினிமயமாக்குதலின் மூலம் சரிசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், நெல்லை கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் பாத்திமா சாந்தா, கருவூல அலுவலர் பாமினிலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வ.உ.சி. கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story