பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறும் கலெக்டர் பேச்சு
அடுத்த ஆண்டு மேலும் புதுப்பொலிவுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூரில் நேற்று முன்தினம் ஜவ்வாதுமலை கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
விழாவில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-
ஜவ்வாதுமலை கோடை விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலெக்டராக என் வாழ்க்கையில் நான் கொண்டாடும் முதல் கோடை விழா இது. நான் என் குடும்பத்தினருடன் கோடை விழாவில் கலந்துகொண்டேன். கோடை விழாவில் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜவ்வாதுமலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், கலாசாரம், பாரம்பரியம் குறித்து மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜவ்வாதுமலை கோடை விழா கடந்த ஆண்டு வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் முறையாக ஜமுனாமரத்தூர் - கோவிலூர் சாலையில் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு...
இந்த ஆண்டு முதல் முறையாக ஜவ்வாதுமலை மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய ஜவ்வாதுமலை உள்ளூர் சந்தை கோடை விழா நடைபெறும் இடத்திலேயே அமைத்து தரப்பட்டது. இதற்கு முன்பு ரோட்டின் ஓரம், சாலைகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு கோடை விழா நடைபெறும் மைதானத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு ஒதுக்கித்தரப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக நாய் கண்காட்சி, படகு போட்டி மற்றும் சாகச விளையாட்டுகள் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழாவில் அரசு துறைகளான மகளிர் குழுக்களின் விற்பனை பொருட்கள், ஆவின், அம்மா குடிநீர், மீன் வறுவல், கூட்டுறவு அங்காடி, கோ-ஆப்டெக்ஸ், காதி, கைத்தறி ஆகிய இடங்களில் விற்பனை சிறப்பாக இருந்தது. அடுத்த ஆண்டு மேலும் புதுப்பொலிவுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஜவ்வாதுமலை கோடை விழா தொடர்ந்து கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாய் கண்காட்சி
விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கந்தசாமி பரிசு வழங்கினார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக கைப்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய விளையாட்டு பொருட்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கினார்.
பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கங்களில் சிறப்பாக காட்சிப்படுத்திய அரங்கங்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவில் முதல் முறையாக நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, உதவி கலெக்டர்கள் உமாமகேஸ்வரி, பானு, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், சீனிவாசன், கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேஷ்குமார், குமார், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சத்தியமூர்த்தி, புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story