தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2018 4:12 AM IST (Updated: 19 Jun 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது. எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தூதுக்குழு தூத்துக்குடியில் சில கிராமங்களுக்கு சென்றது. அங்குள்ள மக்களில், குறிப்பாக பெண்களை சந்தித்தோம். அவர்கள் எங்களிடம் சொன்ன சில கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டர், ஐ.ஜி. ஆகியோரை நேரில் சந்தித்து கூறினோம். மாவட்டத்தில் சகஜ நிலை திரும்ப தாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறினர்.

மக்களின் வாழ்க்கை, வாழ்வுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக சகஜ நிலை திரும்ப வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு நேர்மாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில கிராமங்களில் பெண்கள் கூறும்போது, இரவு நேரங்களில் சீருடை அணியாமல் போலீசார் ஏராளமானவர்கள் கதவை தட்டுவது, உடைப்பது, வீட்டுக்குள் வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றனர்.

சட்டவிரோதமாக நள்ளிரவில் நடக்கக்கூடிய இந்த செயல்களுக்கு யார் உத்தரவிட்டது? யாருடைய உத்தரவின் பேரில் போலீசார் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.யிடம் வலியுறுத்தி உள்ளோம்.

போராட்டம் தொடர்பாக சாதாரண மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். அதுதொடர்பாக போலீசுக்கு எதிராக ஒரு வழக்கும் போடப்படவில்லை. அப்படியானால் இந்த விசாரணையில் பாகுபாடு இருக்கிறது என்பது தெரியவருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை நடக்கிறது. ஆனால் அதன் முடிவு அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது. இது விசாரணையின் மீது ஒரு நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது. எனவே ஐகோர்ட்டின் கண்காணிப்பில் ஒரு சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவிற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்.

வேதாந்தா குழுமம் மிகப்பெரிய அளவில் பா.ஜனதா கட்சிக்கு நன்கொடை கொடுக்கிறது. எனவே அவர்கள் அதற்கு கைமாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு மோடி அரசு அனுமதி கொடுத்து உள்ளது. அதை தமிழக அரசும் ஆதரித்து உள்ளது. மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகளே முடிவுகள் எடுத்து உள்ளன.

நாங்கள் தொழிற்சாலைக்கோ, உற்பத்திக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தாமிரம் தாதுவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, தூத்துக்குடியில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்கிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தேசியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, பிருந்தாகாரத் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ், ஜான்சி, சுனோலின் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மடத்தூர், பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்களை சந்தித்து கலவரம் தொடர்பாக கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாலையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

Next Story