பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: இருபிரிவினரும் மாணவ-மாணவிகளுடன் சாலை மறியல், பதற்றம்; போலீஸ் குவிப்பு


பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: இருபிரிவினரும் மாணவ-மாணவிகளுடன் சாலை மறியல், பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 5:30 AM IST (Updated: 19 Jun 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே ஒறையூர் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருபிரிவினரும் மாணவ-மாணவிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போட்டி போராட்டத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே ஒறையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஒறையூர், கரும்பூர், பைத்தாம்பாடி, அவியனூர், மேல்காவனூர், பலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 750-க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த 13-ந் தேதி பள்ளிக் கூடத்திற்கு வந்த ஒறையூர் காலனியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது சில மாணவர்கள் மாங்கொட்டையை வீசியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஒறையூர் காலனியை சேர்ந்த மாணவர்கள், ஒறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை தாக்கினர். மேலும் கடந்த 14-ந் தேதி ஒறையூர் காலனியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ஒறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை தாக்கி னர். அதை தடுத்த ஆசிரியர்கள் மீதும் அடி விழுந்தது. இதில் 10 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சேட்டு கொடுத்த புகாரின் பேரில் ஒறையூர் காலனியைச் சேர்ந்த 28 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 15-ந் தேதி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

3 நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஒறையூர் காலனியை சேர்ந்தவர்கள் மாணவ-மாணவிகளுடன் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காலனியை சேர்ந்த 28 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ்பெற வேண்டும், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும், பள்ளியில் பாதுகாப்பு இல்லாததால், வேறு பள்ளிக்கூடத்தில் படிக்க மாற்று சான்றிதழ் தர வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பழனிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுடன் பள்ளி அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய 28 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இருபிரிவினரும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒறையூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து பண்ருட்டியில் இருந்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறினர். பின்னர் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

போராட்டம் முடிவடைந்தபோதிலும் ஒறையூர் கிராமம் மற்றும் காலனியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story