காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது: மாவட்டத்தில் 60 சதவீத லாரிகள் ஓடவில்லை, சரக்குகள் தேக்கம் அடைந்தன
விழுப்புரம் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியதால், 60 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
விழுப்புரம்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்தும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். விழுப்புரம் மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் விழுப்புரம் மாவட்டத்துக்கு பழனி, ஒட்டன்சத்திரம், பெங்களூருவிலிருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதே போல் விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கம்பு, காராமணி, உளுந்து போன்ற விளைபொருட்களை கொண்டு செல்லமுடியாமல் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும் வணிக நிறுவனங்களுக்கு வர வேண்டிய சரக்குகளும் வராததால் கடை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி வரத்து ஓரிரு நாட்களில் முழுமையாக நிறுத்தப்படும் என்பதால் காய்கறி விலை உயர்வடையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் செங்கல், மணல் கொண்டு செல்ல முடியாததால் கட்டுமானப்பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 60 சதவீத லாரிகள் ஓடாமல் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story