8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது


8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 11:30 PM GMT (Updated: 18 Jun 2018 11:03 PM GMT)

சேலம் அருகே 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிப்பதாக மிரட்டிய பெண்ணை குடும்பத்தினருடன் போலீசார் கைது செய்தனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக நில அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 8 வழி பசுமை சாலைக்காக சேலம் அருகே மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அடிமலைப்புதூர் பகுதியில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நிலம் கையகப்படுத்துதல் பிரிவு மண்டல துணை தாசில்தார் பார்த்தசாரதி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவீடு அலுவலர்கள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

அடிமலைப்புதூரில் உள்ள வனப்பகுதியில் நில அளவீடு செய்து எல்லைக்கல் நட்டு வைத்தனர். வனத்தில் நில அளவீடு செய்யப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் யாரும் அங்கு திரளவில்லை. எனினும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலஅபகரிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகாளஸ்வரன் மேற்பார்வையில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அடிமலைப்புதூர் பகுதியில் உண்ணாமலை (வயது 62) என்ற பெண்ணுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதைப்பார்த்த உண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் தனது குடும்பத்தினருடன், அங்கு சென்று, எங்களது நிலத்தை அளக்காதீர்கள், நிலத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி அளவீடு செய்யுங்கள். எங்களது நிலத்தை கையகப்படுத்தாதீர்கள் எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு வந்த பொதுமக்கள் சிலரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உண்ணாமலை, தனது குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். மேலும் அவரை தரையில் உருண்டுபடி கதறி அழுதார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உண்ணாமலை மற்றும் அவரது மகன் அய்யந்துரை, மருமகள்கள் அலுமேலு, சுதா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து 4 பேரையும் மாலையில் விடுவித்தனர்.

இது குறித்து உண்ணாமலை கண்ணீர் மல்க கூறும் போது, எனது கணவர் ஏழுமலை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். எங்களுக்கு சொந்தமாக 1½ ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை 3 மகன்களுக்கும் சரியாக பிரித்து கொடுத்தேன். தற்போது பசுமை சாலைக்காக நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதில் எங்களது 1½ ஏக்கர் நிலமும் பறிபோகிறது. எனவே எங்களது நிலத்தை விடுத்து நில அளவீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Next Story