தாத்தியம்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை


தாத்தியம்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை
x
தினத்தந்தி 19 Jun 2018 4:43 AM IST (Updated: 19 Jun 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

தரம் உயர்த்தப்பட்ட தாத்தியம்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மாவட்ட கலெக்டரிடம் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தாத்தியம்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கூடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கூடம் திறந்து 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தவிர 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், தரம் உயர்த்தப்பட்ட தாத்தியம்பட்டி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவும், தேவையான கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் நேற்று தங்களது பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.

காடையாம்பட்டி தாலுகா தாத்தியம்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. தொடக்க பள்ளியாக இருக்கும்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இருந்தது. தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்கலாம். ஆனால் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் மாணவர் சேர்க்கை இதுவரை நடைபெறவில்லை. எனவே, தரம் உயர்த்தப்பட்ட தாத்தியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கல்வித்துறை மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் ரோகிணியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

முத்துநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த மதுக்கடையின் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, ஈஸ்வரன் கோவில், கால்நடை மருத்துவமனை, அங்கம்மாள் கோவில் ஆகியவை உள்ளன. மதுக்கடை அருகில் பஸ் நிறுத்தம் இருப்பதால் அங்கு செல்வதற்கு பள்ளி, கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் மது பிரியர்கள் மதுகுடித்துவிட்டு ஆபாசமாக பேசுகிறார்கள். இந்த மதுக்கடை உள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். குடியிருப்புகள் மத்தியில் உள்ள அரசு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Next Story