அகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம்


அகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம்
x
தினத்தந்தி 19 Jun 2018 11:00 AM IST (Updated: 19 Jun 2018 10:50 AM IST)
t-max-icont-min-icon

நாளை (ஜூன் 20-ந்தேதி) உலக அகதிகள் தினம்.

ஒரு நாட்டின் குடியுரிமை பெற்ற மனிதர்கள் போர், மதம், அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு கலவரங்கள், தட்பவெப்பம் போன்ற பல்வேறு காரணங்களினால் தாங்கள் உயிர் வாழ மற்றொரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்லும்போது, அவர்களை அகதிகள் என்று குறிப்பிடுகிறோம்.

முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டினர் ஜூன் மாதம் 20-ந்தேதியை அகதிகள் நினைவு தினமாக அனுசரித்து வந்தார்கள். ஐக்கிய நாட்டு சபை ஆப்பிரிக்க நாட்டு அகதிகளுக்கு தன் ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் 2000-ம் ஆண்டு அகதிகளுக்கான புதிய கொள்கையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 20-ந்தேதி உலக அகதிகள் தினமாக அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முதலில் அசிரியன் என்ற நாட்டை சேர்ந்தவர்கள், பண்டைய கால இஸ்ரேல் மீது சண்டையிட்டு அங்குள்ள 12 பழங்குடி இன மக்களை வெளியேற்றி அகதிகளாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அகதிகள் என்ற நவீன கால தோற்றப்பாடு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மதங்களின் போருக்கு பின்னர் தான் ஆரம்பமாகியது.

கடந்த கால வரலாற்றில் போர், மதம், இனம், அரசியல் போன்ற பல காரணங்களுக்காக குறிப்பாக உகாண்டா, போஸ்னியா, ருவண்டா, சூடான், சிரியா, லெபனான், கொரியா, அங்கோலா, செர்பியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் மேலும் உலகப்போருக்கு பின் ஜெர்மனியில் இருந்தும், அண்டை நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

2-ம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் பனிப்போர் எனும் திரைமறைவு சண்டையை மற்ற நாடுகளில் ஏவி விட்டு ஊக்கப்படுத்தின. இதனால் பல லட்சம் மக்கள் அகதிகளாக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையில் புத்த மதத்தின் ஆதிக்கத்தாலும், அவர்களின் பெருக்கத்தாலும் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உள்நாட்டு போரின் மூலம் அகதிகளாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்சமயம் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் 50-க்கும் அதிகமான நாடுகளில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்ந்த ஐ.நா. சபை, இரண்டாம் உலகப் போருக்கு பின் அகதிகளுக்கு ஆதரவாக பல சட்ட திட்டங்களை வகுத்தது. அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்ட அகதிகளுக்கு அடிப்படை தேவைகளான பாதுகாப்பு, உணவு, தங்குமிடம், மருத்துவம் போன்ற குறைந்தபட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அறிவுறுத்தியது. உலகில் உள்ள 147 நாடுகள் அகதிகளை ஏற்பதற்கு உறுதி அளித்துள்ளன.

உலகிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான், சூடான் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தற்சமயம் குறிப்பாக சிரியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் வன்முறைகளால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் வேறு நாட்டு அகதிகளால் உள்நாட்டில் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அகதிகளை வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் தற்சமயம் அவர்களால் ஏற்படும் உள்நாட்டுக் கலவரம், பயங்கரவாதம், அமைதியின்மை போன்ற காரணங்களால் அவர்களை அனுமதிக்க தயக்கம் காட்டுகின்றன.

பண்டைய காலங்களில் போருக்குப்பின் எதிரி நாட்டிலிருந்து பெரும்பாலான பெண்கள் சிறையெடுக்கப்பட்டு அந்தபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். ஆகவே தான் அரசனோ, கணவனோ இறந்தால், அரசியும், மனைவிமார்களும் எதிரிகளின் கையில் சிக்காமல் இருக்க உடன்கட்டை ஏறும் பழக்கம் வட இந்தியாவில் இருந்தது. அதே போல, வட இந்தியாவில் சில பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் தாலியில் சிறிதாக வட்ட சிமிழ் வடிவில் ஆபரணம் செய்து அதில் விஷத்தை நிரப்பி இருப்பார்கள். அந்த நாடு போரில் தோற்றுவிட்டால் உடனே விஷத்தை அருந்தி இறந்துவிடும் பழக்கம் இருந்துவந்தது.

இன்றைய புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் சுமார் 62 கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளனர். ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, அகதிகளில் முதல் இரண்டு இடங்களில் பாலஸ்தீனம் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஐ.நா. அகதிகள் அமைப்பு 1951-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு பல சட்டத்திட்டங்களை வகுத்திருந்தாலும் அகதிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்கள் சுகாதாரமற்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான மருத்துவம், உணவு, நீர் போன்ற அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நாட்களை கடத்தி வருகிறார்கள்.

உலக நாடுகள் அகதிகளின் நலனில் போதிய அக்கறை செலுத்தாதது மிகவும் வருந்தத்தக்கது. அகதிகள் பிரச்சினை பிற நாட்டின் பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் இணைந்து அகதிகள் உருவாவதற்கான காரண கர்த்தாவாக விளங்கும் பயங்கரவாதம், பொருளாதாரம், மத மற்றும் இன பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி அகதிகள் உருவாகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தற்சமயம் உள்ள பல லட்சம் அகதிகளை அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்க ஐ.நா. சபையுடன் இணைந்து உலக நாட்டின் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும். அகதிகள் என்னும் சொல்லையே அகற்ற அனைவரும் முன்வர வேண்டும்.

- பேராசிரியை விஜயா, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்

Next Story