தமிழ் மொழி படிப்புகளுக்கு வளமான வாய்ப்புகள்


தமிழ் மொழி படிப்புகளுக்கு வளமான வாய்ப்புகள்
x
தினத்தந்தி 19 Jun 2018 3:12 PM IST (Updated: 19 Jun 2018 3:12 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பை பெற ஆங்கிலம், இந்தி போன்ற பிறமொழி அறிவு அவசியம் என்ற பிம்பம் சமீப காலமாக பெரிதாக பேசப்படுகிறது. நடப்பு நிகழ்வுகள் அது நிஜமோ என்று யோசிக்க வைக்கின்றன.

தமிழ்த்துறையை தேர்வு செய்து படிப்பவர்கள் குறைந்து வருவதால், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ்ப் படிப்பை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மக்களின் பிறமொழி நாட்டத்தை இது வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக உள்ளது. தமிழ் மொழி படிப்புகள் படிப்பவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இல்லையா? தமிழ் மொழி படிப்புகளும், அவர்களுக்கு எங்கெங்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது பற்றியும் சிறிது பார்ப்போம்...

தமிழ் மொழி படிப்புகளும், வாய்ப்புகளும் :

தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்ற சிறப்புடையது. செம்மொழி என்ற பெருமை பெற்றது. ஆனால் தமிழில் கல்லூரிக் கல்வியைப் படிப்பது இன்னமும் பெருமைக்குரியதாக இல்லை என்பது வேதனை அளிப்பதாகும். தமிழில் பட்டம் பெறுபவர்கள் தரணியாள முடியும் என்பதே உண்மை.

நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும், அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புகள் உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) பட்டப்படிப்பு முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் வரை படிக்க முடியும். அத்துடன் ஆசிரியர் கல்வியியல் பயிற்சியும், பட்டப்படிப்பும், ஆசிரியர், பேராசிரியர் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆசிரியத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மொழிசார்ந்த பணியிடங்களை பெற முடியும்.

பி.ஏ, பி.எட், எம்.ஏ, எம்.எட். படிப்பவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர் பணிகள் கிடைத்து வருகின்றன. இந்த துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் குறைவாக உள்ளதால், ஏராளமான கல்வி நிலையங்களில் தமிழ் ஆசிரியர் தேவை எப்போதும் இருக்கிறது.

இதேபோல கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு தமிழில் எம்.பில், பிஎச்.டி. படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள், தமிழ்த்துறையில் பட்டம் பெற்றவர்கள், பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றனர். குறிப்பாக அரசின் பல்வேறு துறைகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதில் தேர்வு எழுத முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

பிற துறை வாய்ப்புகள்

தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். இன்றைக்கு பல நிலைகளில் சிறப்பான பணிகளைப் பெறலாம்.

ஊடகத்துறையில் மொழிப் படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்புகள் நிரம்பவே உள்ளன. எழுத்து, பேச்சு ஆகிய இரு நிலைகளிலும் சிறந்த ஆற்றல் கொண்டிருந்தால் எளிதில் வேலைவாய்ப்பு பெற முடியும். குறிப்பாக, பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் என இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. டி.வி.கள், வானொலி, பண்பலை போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.

இன்று ஊர்தோறும் தனியார் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் கோலோச்ச முடியும்.

பிரசித்தி பெற்ற பி.பி.சி, சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மேலும், கணினி அச்சுத் தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்ற பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. மரபார்ந்த செம்மையான தமிழறிவு பெற்றவர்கள் இந்த பணியிடங்களில் கவுரவமான ஊதியத்துடன் பணியாற்றலாம். தமிழோடு, பிறமொழி அறிவும் இருப்பின் மொழிபெயர்ப்பு துறையில் ஏராளமான வாய்ப்புகளை பெறலாம்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் பாடமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஊக்கத்தொகை

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை பல்கலைக் கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது. அதேபோல, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பணிவாய்ப்புகள்

தமிழர்கள் உலகம் முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர். அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மறந்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறாக, உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பான நிலை உள்ளது. தமிழ் படிக்கும் மாணவர்கள், இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு!

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இலவச முதுநிலை படிப்பு


தமிழ் முதுகலை பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழ் வளர்ச்சி தடைபடும் என்பதை அறிந்து தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல்கலைக்கழக தமிழியல் துறையில் கட்டணமில்லா இலவச கல்வி இந்த ஆண்டு முதல் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக தமிழியல் துறையில் முதுகலை பட்டத்திற்கு சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு (2018-19) கல்விக்கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. கட்டணமில்லா இலவசக் கல்வியாக முதுநிலை தமிழ்ப்படிப்பு வழங்கப்பட உள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார். 

Next Story