தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பாராளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம் பிருந்தா காரத் பேட்டி


தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பாராளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம் பிருந்தா காரத் பேட்டி
x
தினத்தந்தி 20 Jun 2018 3:00 AM IST (Updated: 20 Jun 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பாராளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம் என்று பிருந்தா காரத் கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி பாராளுமன்ற இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம் என்று பிருந்தா காரத் கூறினார்.

பிருந்தா காரத் ஆறுதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் நேற்று பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மக்களின் போராட்டத்திற்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்த போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தி உள்ளார்கள். இதில் 13 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வழக்கை வாபஸ் பெற வேண்டும்

100 நாட்களாக அமைதியான முறையில் போராடிய மக்களை எந்த அமைச்சரும், அதிகாரிகளும் ஏன் சந்திக்கவில்லை. அப்படி ஒரு மோசமான மாவட்ட நிர்வாகம் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் கலவரம் முடிந்த பிறகும் கூட இரவு நேரத்தில் கிராமங்களில் சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது இந்த அரசு தேச துரோக வழக்குப்பதிவு செய்து உள்ளது. அவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

குரல் எழுப்புவோம்

வேதாந்தா நிறுவனத்தில் இருந்து மோடி அரசு ஏராளமான நன்கொடை பெற்று உள்ளது. இதனால் தான் அந்த ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். மக்களையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதிக்கும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அழுத்தமாக குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story