நாகையில், மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்


நாகையில், மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில், மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு மின்சார வாரிய நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். திட்ட பொருளாளர் செந்தில்குமார் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடந்த 26.12.2016 அன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியின் படி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு உடனே நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்துறை அமைச்சர் 22.2.2018 அன்று அறிவித்த ரூ.380 தினக்கூலியை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெரியசாமி, சி.ஐ.டி.யூ. நாகை மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் சிவனருட்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த மணிமேகலன் நன்றி கூறினார்.

Next Story