தார்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


தார்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2018 10:00 PM GMT (Updated: 19 Jun 2018 6:37 PM GMT)

பண்டாரத்தான்காடு - ராமகோவிந்தன்காடு இடையே தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பண்டாரத்தான்காட்டில் இருந்து சுப்பிரமணியன்காடு வழியாக தகட்டூர் ராமகோவிந்தன்காடு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. சுப்பிரமணியன்காடு, ராமகோவிந்தன்காடு பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த இணைப்பு சாலையின் வழியாகத்தான் தகட்டூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.

அதேபோல் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் இந்த சாலையின் வழியாக தகட்டூர் சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும், சுப்பிரமணியன்காடு, ராமகோவிந்தன்காடு பகுதிகளில் யாரேனும் இறந்துபோனால் இந்த சாலையின் வழியாகத்தான் சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். சுப்பிரமணியன்காடு, ராமகோவிந்தன்காடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த இணைப்பு சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் பாதியளவிற்கு ஜல்லி, செம்மண் போடப்பட்டது. பின்னர் அத்துடன் அந்த பணியும் நிறைவடைந்துவிட்டது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சைக்கிள்களில் செல்லும்போது மண்ணில் மிகவும் சிரமப்படுகின்றனர். பின்னர் ஜல்லி, செம்மண் கொட்டப்பட்ட சாலைக்கு வந்தவுடன் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் சைக்கிள்கள் சறுக்கி விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.

இந்த சாலை மண் சாலையாக உள்ளதால் அவசர காலங்களில் வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பண்டாரத்தான்காடு - ராமகோவிந்தன்காடு இணைப்பு சாலையை தார்சாலையாக அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story