குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:30 AM IST (Updated: 20 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள கிராமமக்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி, அதன் மூலம் குடிநீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் மின் மோட்டார் பழுதடைந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மின்மோட்டார் சரிசெய்யப்பட்டும் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் கிராம மக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். அங்கும் குடிநீர் இல்லாததால் கிராமமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் நேற்று வாரியங்காவல் மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அருளப்பன், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, சப்-இன்ஸ்பெக் டர் தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 20 நாட் களுக்குள் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாகவும், அது வரை டிராக்டர் மூலம் கிராமமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வாரியங்காவல் மெயின் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story