பெருமாநல்லூர் அருகே விவசாயிகளின் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
பெருமாநல்லூர் அருகே போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கணக்கம்பாளையம் பிரிவு அருகே கடந்த 19.6.1970–ம் ஆண்டு மின் கட்டண உயர்வை குறைக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் வாரணாசிபாளையத்தை சேர்ந்த மாரப்பகவுண்டர், ஈச்சம்பாளையத்தை சேர்ந்த ஆயிக்கவுண்டர், புதுப்பாளையம் ராமசாமி கவுண்டர் ஆகியோர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் உயிரிழந்த இடத்தில் நினைவு தூண் அமைத்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்வேறு அரசியல் கட்சியினர் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நினைவு தூணுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, ஏர்முனை இளைஞரணி என்.எஸ்.பி.வெற்றி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் நல்லநாமி, கிராமிய மக்கள்இயக்கம் சம்பத் குமார், அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு வேலுசாமி, கட்சி சார்பற்ற விவசாய சங்க கொண்டசாமி, அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் மணி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக தியாகிகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க விவசாயிகள் பயிரிடும் பயிர்களை தேவைக்கு ஏற்றபடி சாகுபடி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
அதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பயிர் அளவை பதிவு செய்ய வேண்டும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு கால்கோல் விழா தேதி அறிவித்து பணியை உடனே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.