2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: 200 டன் இரும்பு கம்பிகள் தேக்கம்


2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: 200 டன் இரும்பு கம்பிகள் தேக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:15 AM IST (Updated: 20 Jun 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரெயில்வே குட்ஷெட்டில் 200 டன் இரும்பு கம்பிகள் தேக்கம் அடைந்துள்ளன. தினமும் ரூ. 7 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாககூறப்பட்டது.

திருச்சி.

டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், லாரிக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 30 சதவீதம் அதிகரித்ததை வாபஸ் பெறவேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே வேளையில் லாரி உரிமையாளர் சங்கத்தின் மற்றொரு அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும், வழக்கம்போல லாரிகள் ஓடும் என்றும் அறிவித்துள்ளனர்.இதனால், லாரிகள் ஓடுமா? ஓடாதா? என்ற பெரும் குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. குழப்பத்திற்கு விடைகாணும் வகையில் ஒரு சங்கத்தினர் அறிவித்தபடி லாரிகளை ஓட்டவில்லை. மற்றொரு சங்கத்தினர் வழக்கம்போல லாரிகளை இயக்கி வருகிறார்கள். கோரிக்கையை நிறைவேற்றி தீர்வு காணும் முடிவில், லாரி உரிமையாளர்கள் இடையே ஒற்றுமை உணர்வு இல்லாத சூழலை காட்டுவதாக இந்த போராட்டம் அமைந் துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக, லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் இன்னொரு சங்கத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கும் லாரிகள் வழக்கம்போல ஓடின.

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் ரெயில் வேகன்கள் மூலம் வந்திறங்கிய இரும்பு கம்பி சுருள்கள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. வடமாநிலமான கொல்கத்தா பிலாய் நகரில் இருந்து 200 டன் இரும்பு கம்பி சுருள்கள்(காயில்) திருச்சி ரெயில்வே குட்ஷெட்டிற்கு சரக்கு ரெயிலில் நேற்று வந்தது. கோவைக்கு செல்லக்கூடிய இரும்பு கம்பி சுருள்கள் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக எடுத்து செல்லமுடியாமல் குட்ஷெட்டின் யார்டு பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும், எங்களால் வாடகையை உயர்த்தி ஒப்பந்ததாரர்களிடம் வாங்க முடியவில்லை. 2016-ம் ஆண்டு இருந்த டீசல் விலைக்கு ஏற்பதான் லாரி வாடகையை தரமுடியும் எனவும், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் ஒப்பந்ததாரர்கள் கூறி வருகிறார்கள். இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி விட்டனர். பாடி கட்டிய லாரிக்கு ஆண்டுக்கு ரு.42 ஆயிரமும், டாரஸ் லாரிக்கு ரூ.52 ஆயிரம் என கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கிறார்கள். இதை பழைய கட்டணப்படியே வசூலிக்க வேண்டும்.

லாரி வாடகையை உயர்த்தி வழங்க முடியவில்லை என்பதால், சில உரத்தொழிற்சாலைகள் நிர்ணயித்த டன்னை விட கூடுதலாக லாரிகளில் உரங்கள், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி அனுப்புகின்றனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புகார் கொடுத்தால், எங்களிடம் போதிய ஆட்கள் இல்லை எனக்கூறி சோதனைக்கு கூட மறுத்து விடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லாரிகள் வரை ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ரூ.7 கோடிவரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) சென்னையில் எங்கள் கோரிக்கை குறித்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story