8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம் பொதுமக்கள் எதிர்ப்பு, வாக்குவாதம்


8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம் பொதுமக்கள் எதிர்ப்பு, வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 Jun 2018 5:00 AM IST (Updated: 20 Jun 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

அரூர் பகுதியில் 8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்,

சேலம்-சென்னை இடையே புதிதாக 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் மலைப்பகுதிகள் வழியாக இந்த பசுமை சாலை அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஒன்றியங்களில் பசுமை வழி சாலை அமைய உள்ள இடங்களில் சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரூர் அருகே உள்ள லிங்காபுரத்தில் தொடங்கி நம்பிப்பட்டி, சின்னாங்குப்பம், டி.புதூர், மாலகாப்பாடி உள்ளிட்ட 8 கிராமங்கள் வழியாக நிலங்கள் அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது லிங்காபுரம், செல்லம்பட்டி பகுதியில் உள்ள ஏரிகளில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதில் விவசாய நிலம் மற்றும் விவசாய கிணறு, சில வீடுகள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பசுமை வழி சாலை அமைக்க ஏரிகள் எடுத்தால் இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறையும். மேலும் விவசாய தொழில் பெரிதும் பாதிக்கும். இதனால் எங்கள் கிராமங்கள் வழியாக பசுமை வழி சாலை அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

Next Story