சேலையூரில் பசுமை உரக்கிடங்கு திறப்பு பொது மக்களுக்கு இலவசமாக உரம் வழங்கப்படும்


சேலையூரில் பசுமை உரக்கிடங்கு திறப்பு பொது மக்களுக்கு இலவசமாக உரம் வழங்கப்படும்
x
தினத்தந்தி 20 Jun 2018 2:42 AM IST (Updated: 20 Jun 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

சேலையூரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய வகை பசுமை உரக்கிடங்கை தாம்பரம் நகராட்சி ஆணையாளர் திறந்துவைத்தார்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியின் நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவின்படி நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் வீடுகளில் இருந்து பெறப்படும் திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து வாங்கும் பணி துவங்கியுள்ளது. 

வாரம் தோறும் புதன் கிழமைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மக்கும் திடக்கழிவுகளிலிருந்து, உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கும் பணியை நகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி ரூ.6 கோடியே 60 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. 

தாம்பரம் நகராட்சி அம்மன் நகர், அருள் நகர், கன்னடபாளையம், சேலையூர் சுடுகாடு, அம்பேத்கர் நகர், மண்ணுரங்கன் குளம் உள்ளிட்ட 7 பகுதிகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் பெரிய அளவில் பசுமை உரக்கிடங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே போல் நகராட்சி பகுதியில் 20 இடங்களில் சிறிய வகை பசுமை உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

நுண் உர செயலாக்க மையம்

இதில் சேலையூர் நகராட்சி பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய வகை பசுமை உரக்கிடங்கை தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திறந்துவைத்து, பணிகளை பார்வையிட்டார்.  

அப்போது, சுகாதார அலுவலர் அறிவுசெல்வம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:–

தாம்பரம் நகராட்சி பகுதியில் கிடைக்கும் மக்கும் குப்பைகளை அந்தந்த இடங்களிலேயே உரமாக்கவும், மக்காத குப்பைகளை அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு அனுப்பும் பணிகளும் தொடங்கியுள்ளன.

இந்த உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி தோட்டம் அமைக்கப்பட்டு செடிகள் வளர்க்கப்பட்டு பசுமை பேணப்படும். இந்த கிடங்குகளில் தயாராகும் உரங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 

பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை புதன் கிழமை மட்டும் குப்பை அகற்றும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story