நாமக்கல் அருகே வேன் கவிழ்ந்து 11 மாணவ-மாணவிகள் காயம்


நாமக்கல் அருகே வேன் கவிழ்ந்து 11 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:30 AM IST (Updated: 20 Jun 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்ததில் 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

நாமக்கல்,

எருமப்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி வந்து செல்ல பெற்றோர் தரப்பில் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். இந்த வேன் டிரைவர் ஜெயராம் (வயது 58) தினசரி காலையில் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வார்.

வழக்கம் போல் நேற்று மாலை பள்ளிக்கு வந்து, 25 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, எருமப்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதனால் வேனில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் மாணவ, மாணவிகளை மீட்டு நாமக்கல் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாணவி சுபஸ்ரீ (10) படுகாயம் அடைந்தாள். இவள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இதுதவிர நித்ய ராகவன் (10), தனிஷ்கா (14), ஹரினி (8), சூரியதேவ் (4), தர்னிஷ் (10), லோகேஷ் (7), வர்ஷா (5), பிரதீவ் (11) உள்பட 10 மாணவ, மாணவிகள் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story