நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நித்திரவிளை,
ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய், மணல் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகளும், போலீசாரும் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரளாவை நோக்கி சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரேஷன் அரிசியினை காப்புக்காடு அரசு குடோனிலும், ஆட்டோவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story